
பாண்டியர்களின் படையெடுப்பை தொடர்ந்து வியட்நாமுக்கு தப்பி ஓடும் சோழர்கள், போகிறபோது பாண்டிய நாட்டு குல தெய்வ சிலையையும் களவாடி செல்கிறார்கள். அதை தேடி போகிற பாண்டியனின் வாரிசுகள் யாருமே திரும்புவதில்லை. கடைசியாக போகிற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பிரதாப் போத்தனும் மாயமாகிறார். கண்டுபிடிக்க புறப்படுகிறார் தொல்பொருள் துறையை சேர்ந்த ரீமாசென். இவருடன் ஆன்ட்ரியாவும். இவர் பிரதாப் போத்தனின் மகள். (இவரும் தொ.பொ.ஆ தான்) கூடவே போகும் சுமை து£க்கும் கூலிகளில் கார்த்தியும் ஒருவர். ஏழு விதமான ஆபத்துகளை கடந்து செல்லும் இவர்கள் சோழர்களின் இருப்பிடத்தை அடைகிறார்கள். அங்கு நடப்பது என்ன? க்ளைமாக்ஸ்...
முதல் பாதியில் மட்டுமல்ல, முழுக்க முழுக்கவே 'கொழு கொழு' ராஜ்ஜியம்தான். கார்த்திக்கின் கண்கள் மேயும் இடங்களை கேமிரா மறைத்தாலும், உணர்ந்து ருசிக்கிறான் ரசிகன். தாக்குவதற்காக மேலே விழும் கார்த்தியிடம், 'நான் செம கட்டையில்ல...' என்கிற ரீமாசென் மொத்த ரசிகர்களையும் இந்த விசேஷ கட்டையை வைத்துக் கொண்டே கவிழ்க்கிறார். பின் பாதியில் சோழ மன்னனின் து£துவள் ஆகி மன்னனை கூடுவதற்கு தவிக்கும் காட்சிகளில் அருமையான நடிப்பு. வாள் சண்டை, வசீகர டான்ஸ், இப்படி தனிக்காட்டு ராஜ்ஜியம்தான் ரீமாவுக்கு. இவர் சோழ வாரிசுதானா என்பதற்கு செய்யப்படும் சில டெஸ்ட்டுகள், கலெக்ஷனை மட்டுமே குறி வைத்த சீப் (ே)டெஸ்ட்!
முதல் பாதியை கலகலப்பாக நகர்த்தி செல்வது கார்த்தியும் அவரது அசால்ட் ஸ்டைலும்தான். "போ போ... போயி வேலைய பாரு" என்று குரல் கொடுத்துக் கொண்டே, இரண்டு ஃபிகர்களையும் கவிழ்க்க முயலும் அவரது சபல புத்தி, கொளுத்தி வைத்த வயாக்ரா பத்தி! போதும் போததற்கு இவரது பின்புறத்தில் ஊசியை போட வருகிறார் ஆன்ட்ரியா. தனக்காகதான் ரீமா, ஆன்ட்ரியாவுக்குள் ஒரு ஈகோ யுத்தம் வெடிக்கிறது என்று புரியாமல் அந்த ஆங்கிலத்தை வெறித்து கேட்கிறாரே, தியேட்டரே திடுதிடுக்கிறது. குளிர் நேரத்தில் ரீமா, ஆன்ட்ரியாவை கையாளும் அவரது திறமையும் சூடேற்றுகிறது. இவர்களிடம் மாட்டிக் கொண்டு, விட்டால் போதும் என்று அவர் தவிப்பதும், "அட, மூதேவிங்களா. எங்கடி போறீங்க?" என்று அரற்றுவதும் செம ஜாலியாக்குகிறது ரசிகர்களை. எல்லாம் சரி, கட்டபுள்ள மாதிரி போகிற வருகிறவர்களிடமெல்லாம் இவர் அடி வாங்குவதுதான் வலி.
உம்..மென்றே வருகிறார் ஆன்ட்ரியா. சரக்கடிக்கிற ஒரு காட்சியில் மட்டும் அஹ்ஹஹ்ஹா...
ம்ம்ம்ம்... நமது பார்த்திபன். தமிழ்சினிமா ரசிகர்கள் இதுவரை அறிந்திராத, பார்த்திராத புது ராஜா! லாஜிக் பேத்தல்களை விடுங்கள். பார்த்திபனின் ஒவ்வொரு அசைவும் ராஜ கம்பீரம். தன்னை ஒரு பெண் ஏமாற்றிவிட்டாள் என்ற ஆத்திரமும், அவமானமும் ஒருசேர அவர் போரிடுகிற காட்சிகள் பிரமிப்பு.
ஓலைச்சுவடிகளில் வரும் ஆபத்துகளில் மணல் உள்வாங்குகிற காட்சிகளில் கிராபிக்ஸ் நுட்பம் அருமை. சிவன் தோற்ற நிழல் காட்சியும் பலே. பாம்பு காட்சிகள் அருவருப்பு.
அசர வைக்கும் பிரமாண்டம், அதிர வைக்கும் பின்னணி இசை, ஆங்காங்கே மிரட்டும் கிராபிக்ஸ் என்று ஹாலிவுட் படங்களை கண்முன் நிறுத்துகிறார் செல்வராகவன். தமிழ்சினிமாவில் இதற்கு முன் இப்படி ஒரு படம் வந்ததே இல்லை! ஆனால் இந்த முத்துக்களை கோர்த்திருக்கிற திரைக்கதை நு£ல், ரொம்பவே நைந்து போயிருப்பதுதான் வேதனை.
படம் முடிந்து வெளியே வரும்போது பல பல கேள்விகள் துளைத்தெடுக்கின்றன.
செல்போன் அடித்தால் வந்திறங்குகிற ஆயுதங்களும், அது தாங்கி வருகிற ஹெலிகாப்டரும் சம்பவ இடத்திற்கே நேரடியாக வருகிற போது, ஏழு ஆபத்துகளை தாண்டி எதற்காக வர வேண்டும்? ஹெலிகாப்டர் மூலமாகவே சோழ மண்டலத்தை கண்டுபிடித்திருக்கலாமே?
மழையே இல்லை. விவசாயமும் இல்லை. மக்கள் பட்டினி. சோழர்கள் நர மாமிசம் சாப்பிட்டுதான் பசியாறுகிறார்கள் என்றெல்லாம் காட்டுகிறார்கள். ஆனால், மன்னர் பார்த்திபன் வரும்போது இருபுறமும் நின்று பூக்கள் து£வி வரவேற்கிறார்கள். அந்த பூக்கள் எந்த நிலத்தில் விளைந்தன ஐயா?
மழை இல்லை என்று மன்னர் வேதனைப்படுகிற போதே, பின்னணியில் மாடத்திலிருந்து தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கிறதே? (கேமிரா பியூட்டிக்காக) ஆர்ட் டைரக்டர், ஒளிப்பதிவாளருக்கு கூட கதையை சொல்லவில்லையா செல்வா?
இத்தனை வெப்பன்ஸ் துணையுடன் வந்து சேருகிறது ரீமாசென் கோஷ்டி. ஆனால் அதற்கு முன்பே, ஒரு துணையும் இல்லாமல் தனியாக சோழ அரண்மனைக்கு வந்து சேர்ந்தாரே, பிரதாப் போத்தன். அது எப்படி?
பல நு£ற்றாண்டுகளாக அரண்மனையை விட்டு வெளியே வராத மன்னர் பார்த்திபன் தஞ்சை விவசாயிகள் எலிக்கறி தின்பதாக கொதிக்கிறாரே, எப்படியய்யா?
வியக்க வைக்கும் ஒளிப்பதிவு, மயங்க வைக்கும் ஆர்ட் டைரக்ஷன், கிறங்க வைக்கும் இசை இப்படி அற்புதமான கலவைகளை வைத்துக்கொண்டு 'கவலைகளையும்' தர முடியும் என்று நிரூபித்த செல்வராகவனை வேண்டுமானால் 'ஆயிரத்தில் ஒருவன்' என்று சபிக்கலாம்.....

Truly Neutral Review....
ReplyDeleteVin.